கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 'சுப்ரம் அறக்கட்டளை'எனும் தன்னார்வ அமைப்பானது எம் பாடசாலையில் கல்வி பயிலும் ஏழ்மை நிலையிலுள்ள பல மாணவர்களுக்கு கற்பித்தல் பணியைச்செய்துவரும் நான்கு தொண்டர் ஆசிரியர்களுக்கான மாதாந்த ஊதியத்தை வழங்கி வருகின்றது என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த 'சுப்ரம் அறக்கட்டளை'யின் கருணையாலும்,அதிபர் ,ஆசிரியர்கள் , தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் எம் உறவுகளின் அளப்பரிய பங்களிப்புகளாலும் இன்று எங்கள் மாணவச் செல்வங்கள் நடப்பாண்டின் புலமைப்பரீட்சைத் தேர்வில் நாங்கள் எதிர்பாராத இமாலய வெற்றியை ஈட்டி எம் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சி கண்டு மேலும் ஒர் தொண்டர் ஆசிரியை தானாக முன்வந்து இலவச கற்பித்தல் பணியை கடந்த ஐந்து மதங்களாக தொடர்ந்து செய்து வருகின்றார். இவருக்கும் மாதாந்த ஊதியம் வழங்குவதுடன் சிறந்த கற்பித்தல் புரியும் தொண்டர் ஆசிரியர்களுக்கு மேலதிக ஊதியம் வழங்கி மேலும் ஊக்குவிக்க 'சுப்ரம் அறக்கட்டளை' முன்வந்துள்ளது.